அதிபுத்திசாலி இளைஞரான ஆர்யா, எந்த ஒரு வேலையையும் நேர்த்தியாக செய்யக்கூடிய குணம் கொண்டவர். மறுபுறம் கல்லூரி மாணவியான சாயீஷா, ஒரு விபத்தில் சிக்குகிறார். அப்போது அவருக்கு லேசாக காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது அங்கு ஒரு கும்பல் செய்யும் சதிச் செயலால் சாயிஷா கோமா நிலைக்கு செல்கிறார். அவரை கடத்திச் செல்கின்றனர்.
கோமா நிலைக்கு செல்லும் போது அருகில் இருக்கும் டெடி பியர் பொம்மையை சாயீஷா கெட்டியாக பிடித்துக் கொள்கிறார். அப்போது அவரின் ஆத்மா அந்த டெடி பியருக்குள் புகுந்துவிடுகிறது. இதையடுத்து உயிர்பெறும் அந்த டெடி பியர், ஆர்யாவை சந்தித்து தன் நிலையை எடுத்து சொல்கிறது. ஆர்யாவும் அதற்கு உதவ முன்வருகிறார். இறுதியில் ஆர்யாவும் டெடியும் சேர்ந்து சாயீஷாவை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் ஆர்யா, புத்திசாலி இளைஞனாக நடித்திருக்கிறார். அவரது வழக்கமான துறுதுறு நடிப்பை வெளிப்படுத்தாமல் மிடுக்கான வேடத்தில் நடித்து வித்தியாசம் காட்டி இருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் தூள் கிளப்பி இருக்கிறார்.
நாயகி சாயீஷாவிற்கு படத்தில் சின்ன ரோல் தான். ஆரம்பத்தின் ஒரு காட்சியில் வரும் அவர், பின்னர் கிளைமாக்ஸில் தான் வருகிறார். அவருக்கு பெரிதாக ஸ்கோர் செய்வதற்கான வாய்ப்பு இப்படத்தில் வழங்கப்படவில்லை என்றே சொல்லலாம்.
பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி ஸ்டைலிஷ் வில்லனாக நடித்திருக்கிறார். அக்கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அவரது குரல் மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்துள்ளது. கருணாகரன், சதீஷ் ஆகியோர் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
அனிமேஷன் கதாபாத்திரமான டெடி, படத்தின் மற்றொரு ஹீரோ என்றே சொல்லலாம். படம் முழுக்க ஆர்யாவுடன் பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த டெடியை பார்க்கும் போது அனிமேஷன் போல் அல்லாமல் ஒரு பொம்மை நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும் என்பதை தத்ரூபமாக காட்டி உள்ளனர்.
இயக்குனர் சக்தி செளந்தர் ராஜன், முதல் பாதியை விறுவிறுப்பாக நகர்த்தியவர், இரண்டாம் பாதியில் கோட்டை விட்டுள்ளார். சில இடங்களில் லாஜிக் மீறல்கள் அப்பட்டமாக தெரிவது படத்தின் மைனஸ். மற்றபடி ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் திறம்பட கையாண்டுள்ளார்.
யுவாவின் ஒளிப்பதிவும் டி இமானின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் யுவா, ஒவ்வொரு காட்சியை கண்களை கவரும் வகையில் வண்ணமையமாக காட்சிப்படுத்தி இருக்கிறார். டி இமானின் இசையில் பாடல்கள் ரசிக்கும் படி உள்ளன. பின்னணி இசை காட்சிகளுக்கு வலுசேர்த்திருக்கின்றன.