Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

தலைநகரம் 2 திரை விமர்சனம்

Thalainagaram 2 Movie Review

தலைநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தலைநகரம் 2 வெளியாகியுள்ளது.

தலைநகரம் 2 ‘தலைநகரம்’ படத்தில் மிகப்பெரிய ரவுடியாக வரும் சுந்தர்.சி தன்னுடைய நண்பனின் மரணத்திற்கு பிறகு திருந்தி வாழ்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக வெளியாகியுள்ள 2ஆம் பாகத்தில் திருந்தி வாழும் சுந்தர்.சி, தம்பி ராமையாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் வேலை செய்து வருகிறார்.

மறுபக்கம் வடசென்னையை ஜெய்ஸ் ஜோஸ், மத்திய சென்னையை விஷால் ராஜன், தென் சென்னையை பிரபாகர் ஆகியோர் ரவுடிசம் செய்து அந்த பகுதிகளை தன் வசம் வைத்து வருகிறார்கள். இவர்களுக்குள் மொத்த சென்னையின் (தலைநகரம்) அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி நிலவி வருகிறது.

இந்நிலையில் மத்திய சென்னை ரவுடி விஷால் ராஜனுடன் இருக்கும் நடிகை பாலக் லால்வானியை கடத்தி மயக்க நிலையில் பாலியல் பலாத்காரம் செய்து விடுகிறார் தென் சென்னை ரவுடி பிரபாகர். இந்த நடிகை கடத்தல் பிரச்சனையில் சுந்தர்.சியை சிக்க வைத்து விடுகின்றனர். இந்த பிரச்சனையில் தம்பி ராமையா சிக்குகிறார். இவரை காப்பாற்ற மீண்டும் ரவுடிசத்தை கையில் எடுக்கிறார் சுந்தர்.சி. அதன்பின் 3 ரவுடிகளும் சுந்தர்.சியை கொல்ல திட்டம் போடுகிறார்கள்.

இறுதியில் சுந்தர்.சியை 3 ரவுடிகள் கொன்றார்களா? தலைநகரத்தை பிடிக்கும் போட்டியில் யார் ஜெயித்தது? மீண்டும் ரவுடிசத்தை கையில் எடுத்த சுந்தர்.சியின் நிலைமை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சுந்தர்.சி, அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அதிக கவனம் ஈர்த்து இருக்கிறார். ஆனால், ஒரு சில இடங்களில் பெரிய ரியாக்ஷன் காட்டாமல் கடந்து சென்றிருக்கிறார். மூன்று ரவுடிகளாக வருபவர்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். பாலக் லால்வானி அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார் தம்பி ராமையா.

தலைநகரம் முதல் பாகம் போலவே இப்படத்தையும் இயக்கி இருக்கிறார் இயக்குனர் வி.இசட்.துரை. பாடல், காதல், டூயட் என்று இல்லாமல் படத்தை இயக்கி இருப்பது சிறப்பு. ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே வேகத்தில் திரைக்கதை நகர்கிறது. ஆனால், முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இப்படத்தில் சற்று குறைவு என்றே சொல்லலாம். ரவுடிகளின் மிரட்டல் வெறும் வசனமாகவே கடந்து செல்கிறது. லாஜிக் மீறல்களை கொஞ்சம் தவிர்த்து இருக்கலாம்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பெரிய பலம். ஆக்ஷன் காட்சிகளில் அதிக ஸ்கோர் செய்து இருக்கிறார். கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

மொத்தத்தில் தலைநகரம் 2 – மிரட்டல் குறைவு

Thalainagaram 2 Movie Review
Thalainagaram 2 Movie Review