போலீஸ் அதிகாரியான கிஷன் தாஸ், ஒரு பிரச்சனையில் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். ஒரு திருமண விழாவில் நாயகி ஸ்ம்ருதி வெங்கட்டை பார்க்கும் கிஷன் தாஸ், அதன் பிறகு பழகி இருவரும் காதலிக்க தொடங்குகிறார்கள். பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள்.
நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கும் நிலையில், ஷ்ம்ருதி வெங்கட் வீட்டிற்கு கிஷன் தாஸ் செல்கிறார். அங்கு ஸ்ம்ருதி வெங்கட்டின் பக்கத்து வீட்டில் இருக்கும் ராஜ் ஐயப்பா இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறார்.இறுதியில் ராஜ் ஐயப்பா எப்படி இறந்தார்? ஸ்ம்ருதி வெங்கட், கிஷன் தாஸ் நிச்சயதார்த்தம் நடைபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் கிஷன் தாஸ், ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஸ்ம்ருதி வெங்கட்டை காதலிப்பது, அவரை சமாதானம் செய்வது, ராஜ் ஐயப்பாவின் உடலை என்ன செய்வது என்று திட்டம் போடுவது என நடிப்பில் பளிச்சிடுகிறார்.நாயகியாக நடித்து இருக்கும் ஸ்ம்ருதி வெங்கட், காதல், கோபம், பரிதவிப்பு என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ராஜ் ஐய்யப்பாவின் நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. இவரது தாயாக வரும் கீதா கைலாசம் மற்றும் பால சரவணன் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
காதல், சஸ்பென்ஸ், திரில்லர் பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அரவிந்த் ஶ்ரீநிவாசன். எதிர்பாரத தருணத்தில் நடந்த ஒரு கொலை, அதில் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் நாயகன் என விறுவிறுப்பாக திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். முதல் பாதி காதல், காதலர்கள் பிரிவு என மெதுவாக செல்லும் திரைக்கதை, இரண்டாம் பாதியில் மர்மம், திரில்லர் என வேகம் எடுத்து இருக்கிறது.
தர்புகா சிவா இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். அஸ்வின் ஹேமந்தின் பின்னணி இசை திரைக்கதைக்கு ஏற்றவாறு அமைந்துள்ளது.
ராஜா பட்டாச்சார்ஜியின் ஒளிப்பதிவு சிறப்பு.
Zhen ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.”,
