ஜெய் தனது மனைவி ஷிவாடா மற்றும் குழந்தையுடன் குடும்பமாக சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஒரு நாள் வேலைக் காரணமாக பெங்களூருவுக்கு செல்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக தனது முன்னாள் காதலி ஐஸ்வர்யா ராஜேஷை ரயில் நிலையத்தில் ஜெய் சந்திக்கிறார். ஐஸ்வர்யா ராஜேஷும் பெங்களூருவுக்கு செல்வதால் இருவரும் ஒன்றாக பயணிக்கின்றனர். பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட இருவரும் தங்களுடைய செல்போன் எண்ணை பரிமாறிக் கொள்கின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷின் கணவர் மிகவும் கோபக்காரர், மிகவும் துன்புறுத்துகிறார். இதனால் வாழ்கையே வெறுப்பில் வாழ்ந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், முன்னாள் காதலன் ஜெய்யின் ஆறுதல் வார்த்தைகளும், பழைய நினைவுகளும் அவரை மீண்டும் காதலிக்க தொடங்க வைத்து விடுகிறது. இருவரும் நன்றாக பழகி வர ஜெய்யுடன் வாழ ஐஸ்வர்யா முயற்சிக்கிறார்,
இதனால் செய்வதறியாமல் திகைக்கும் ஜெய் மனைவியிடம் இருந்து இதனை மறைக்க தொடங்குகிறார். இறுதியில் ஐஸ்வர்யாவை ஜெய் எப்படி சமாளித்தார்? ஜெய் மனைவியிடம் சிக்கிக் கொண்டாரா? என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. காதல், அன்பு, கோபம், பயம் என பல பரிணாமங்களில் சிறப்பாக நடித்துள்ளார் ஜெய். முன்னாள் காதலியை சந்தித்த பிறகு ஏற்படும் பிரச்சினைகளை சமாளிப்பதில் அற்புதம் காட்டியுள்ளார். ஜெய்யின் மனைவியாக வரும் ஷிவாடா அழகாக நடித்துள்ளார். முன்னாள் காதலியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், காதலை வெளிப்படுத்தும் இடங்களிலும், ஜெய்யை விடாது துரத்தும் இடங்களிலும் கைத்தட்டல் பெறுகிறார்.
முன்னாள் காதலியை சந்தித்த பிறகு என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பதை காதலுடன் விறுவிறுப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் ரோகின் வெங்கடேசன். திரைக்கதையில் வித்யாசம் காட்டி ரசிக்க வைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷின் கதாப்பாத்திரத்தை அழகாக வடிவமைத்து கவனம் பெறுகிறார். ரவிவர்மன் நீலமேகமின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலம். இசையமைப்பாளர் சித்து குமார் அவருடைய பணியை சிறப்பாக செய்துள்ளார். மொத்தத்தில் தீராக் காதல் – திகட்டாத காதல்