Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

தீதும் நன்றும் திரைவிமர்சனம்

Theethum Nandrum Movie Review

ராசு ரஞ்சித்தும், ஈசனும் நெருங்கிய நண்பர்கள். இருவருமே பெற்றோர்களை இழந்தவர்கள். பகலில், மீன் மார்க்கெட்டில் வேலை செய்கிறார்கள். இரவில், முகமூடி அணிந்து கொண்டு கொள்ளையில் ஈடுபடுகிறார்கள். இவர்களுடன் இன்னொரு நண்பர் சந்தீப்ராஜும் கொள்ளையில் சேர்ந்து கொள்கிறார்.

ஈசனுக்கும், அபர்ணா பாலமுரளிக்கும் இடையே காதல் மலர்கிறது. அபர்ணாவின் தாயாரின் எதிர்ப்பை மீறி, இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறார், ராசு ரஞ்சித். அதேபோல் இவருக்கும், லிஜோமோள் ஜோசுக்கும் காதல் துளிர்க்கிறது. காதல் ஜோடிகள் சந்தோசமாக வாழ்க்கையை எதிர்கொள்ளும் நிலையில், ராசு ரஞ்சித்தும், ஈசனும் மீண்டும் கொள்ளைக்கு புறப்படுகிறார்கள்.

ஈசனை மனைவி அபர்ணா தடுக்கிறார். தன் வயிற்றில் குழந்தை வளர்வதாக கூறி, திருட்டுக்கு போக வேண்டாம் என்று உருகுகிறார். அவர் தூங்கிய பிறகு ஈசன் நண்பர்களுடன் போய் ஒரு மதுக்கடையில் கொள்ளையடிக்கிறார். அப்போது மூன்று பேரையும் போலீஸ் சுற்றி வளைக்கிறது. சந்தீப்ராஜு தப்பி ஓடுகிறார். ராசு ரஞ்சித்தையும், ஈசனும் போலீசிடம் சிக்கிக் கொள்கிறார்கள். இதையடுத்து இவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக் கதை.

ராசு ரஞ்சித், கதையின் நாயகர்களில் ஒருவராக நடித்திருப்பதுடன், படத்தை இயக்கியும் உள்ளார். அவரே இயக்குனர் என்பதால் அவருடைய கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல், நேர்மையாக கதை சொல்லியிருக்கிறார். லிஜோமோளுடன் காதல், எதிரிகளுடன் மோதல் என சராசரி கதாநாயகனுக்கு உரிய வேலைகளை கச்சிதமாக செய்து இருக்கிறார்.

இவருடைய நண்பரான ஈசனுக்கும், அபர்ணாவுக்குமான நெருக்கமான காட்சிகள், மோகத்தீ மூட்டுகிறது. சுகத்தையும், சோகத்தையும் அபர்ணா ஆழமும், அகலமுமான கண்கள் மூலம் அழகாக வெளிப்படுத்துகிறார். இவருக்கு சரியான போட்டி, லிஜோமோள். நடை, உடை, பாவனைகளில் வசீகரிக்கிறார். வில்லன்கள் சந்திப் ராஜ், ராஜேந்திரன் ஆகிய இருவரும் மிரட்டலான தேர்வு.

இயக்குனர் ராசு ரஞ்சித்திற்கு இது முதல் படம். படம் முழுக்க அடுத்தது என்ன? என்ற எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார். படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பினும், கதை சொன்ன விதத்திலும், படத்தை காட்சிப்படுத்திய விதத்திலும், கைத்தட்டல்களை பெறுகிறார் இயக்குனர் ராசு ரஞ்சித். படத்தொகுப்பும் படத்திற்கு பலமாக அமைந்துள்ளது. அதையும் ராசு ரஞ்சித் தான் செய்துள்ளார்.

தாதா, ரவுடி கும்பல், முகமூடி கொள்ளையை திரைக்கதையாக கொண்ட படம் என்பதால் இரவு நேர காட்சிகள் ஏராளம். அதற்காக கடுமையாக உழைத்து இருக்கிறார், ஒளிப்பதிவாளர் கெவின்ராஜ். இசையமைப்பாளர் சத்யா, பின்னணி இசை மூலம் படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி இருக்கிறார்.

மொத்தத்தில் ‘தீதும் நன்றும்’ விறுவிறுப்பு.