கடந்த மே 1ஆம் தேதி தமிழ் திரையுலகில் வெளியான சசிகுமாரின் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மற்றும் சூர்யாவின் ‘ரெட்ரோ’ ஆகிய இரண்டு திரைப்படங்களுமே வெவ்வேறு விதமான வரவேற்பைப் பெற்று வருகின்றன. அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் உருவான ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ சென்சிட்டிவான கதைக்களத்தால் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது.
வெளியான 12 நாட்களில் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உலக அளவில் 51 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இது அறிமுக இயக்குனரின் படத்திற்கும், சசிகுமாரின் சமீபத்திய படங்களுக்கும் ஒரு மிகப்பெரிய வசூல் சாதனையாக பார்க்கப்படுகிறது. படத்தின் கதை மற்றும் நடிகர்களின் நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்ததே இந்த வெற்றிக்கு காரணம் என திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், வரும் நாட்களிலும் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான சூர்யாவின் ‘ரெட்ரோ’, கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படம் 12 நாட்களில் உலக அளவில் 96 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. எனினும், படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஒப்பிடும்போது இது சற்று குறைவான வசூல் என்று சில திரை வட்டாரங்களில் கூறப்படுகிறது. சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் காதல் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தாலும், படத்தின் ஒட்டுமொத்த வரவேற்பு கலவையாக இருந்தது வசூலில் எதிரொலித்திருக்கலாம்.
இரு வேறு கதைக்களங்கள் மற்றும் நடிகர்களின் நடிப்பால் இந்த இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாகி ரசிகர்களின் வெவ்வேறு ரசனைகளை பூர்த்தி செய்து வருகின்றன. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ குறைந்த பட்ஜெட்டில் உருவாகி அதிக லாபத்தை ஈட்டி வரும் நிலையில், ‘ரெட்ரோ’ 100 கோடி ரூபாய் வசூல் மைல்கல்லை நெருங்கி வருகிறது. இந்த இரண்டு படங்களின் அடுத்தடுத்த வசூல் நிலவரங்களை பொறுத்திருந்து பார்ப்போம்.

tourist family and retro movie 12 days collection