Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

ட்ரிப் திரைவிமர்சனம்

trip movie review

ஒரு ஜோடி காரில் காட்டுப்பகுதிக்குள் செல்லும் போது மர்ம மனிதர்கள் வழிமறித்து கொலை செய்கிறார்கள். அதே காட்டுப்பகுதிக்கு நாயகன் பிரவீன், நாயகி சுனைனா மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் சுற்றுலா செல்கிறார்கள். அப்போது வழியில் இரத்தக்கரையில் இருக்கும் யோகிபாபு, கருணாகரனை பார்த்து பயப்படுகிறார்கள்.

அன்று இரவு யோகி பாபு, கருணாகரனிடம் சுனைனா சிக்க, அவரை காட்டு பங்களாவிற்குள் தூக்கி சென்றுவிடுகிறார்கள். சுனைனாவை தேடி வரும் நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராக கொல்லப்படுகிறார்கள்.

இறுதியில் சுனைனாவை நண்பர்கள் அனைவரும் காப்பாற்றினார்களா? நண்பர்களை கொலை செய்தது யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் பிரவீன் புதுமுகம் என்று தெரியாதளவிற்கு நடித்திருக்கிறார். சுனைனாவை காப்பாற்ற நினைக்கும் போதும், நண்பர்களை இழக்கும் போதும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக லிடி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சுனைனா, துறுதுறு பெண்ணாக நடித்து கவர்ந்திருக்கிறார். நண்பர்களாக வரும் கல்லூரி வினோத், விஜே சித்து, ராகேஷ், லக்‌ஷ்மி பிரியா, ஜெனிபர் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படத்திற்கு பெரிய பலம் யோகி பாபு. இவரது டைமிங் காமெடி பல இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறது. சீரியசான நேரங்களில் கூட கலகலப்பை கொடுத்திருக்கிறார். இவருடன் பயணிக்கும் கருணாகரன் தனக்கே உரிய பாணியில் காமெடிக்கு கைக்கொடுத்து இருக்கிறார். போலீசாக 2 காட்சிகளில் மட்டும் வந்து சென்றிருக்கிறார் மொட்டை ராஜேந்திரன்.

சுற்றுலா செல்லும் நண்பர்கள் காட்டுக்குள் சிக்கும் பல படங்கள் வெளியாகி இருக்கிறது. ஆனால், இந்த படம் முற்றிலும் வேறு மாதிரியான படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர் டென்னிஸ் மஞ்சுநாத். முதல் பாதி கலகலப்பாகவும், இரண்டாம் பாதி திரில்லருடன் கலகலப்பையும் கொடுத்து இருக்கிறார். குறிப்பாக கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். இறுதியில் வரும் மனிதர்களின் நடிப்பை கொஞ்சம் ஏற்கும்படி கொடுத்திருக்கலாம்.

சித்துகுமாரின் இசையையும், உதயஷங்கரின் ஒளிப்பதிவும் படத்தின் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. பின்னணியில் இசையும் கவனிக்க வைக்கிறது.

மொத்தத்தில் ‘ட்ரிப்’ சிறந்த பயணம்.