அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட சேலம் மாவட்ட அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஏ.வி. ராஜு நடிகை திரிஷா பற்றி அவதூறு கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.இந்த விவகாரம் 2 நாட்களாக பெரும் சர்ச்சையாக வெடித்தது. குஷ்பு, சேரன், காயத்ரி ரகுராம் உள்பட பல திரை உலக பிரமுகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.திரிஷாவும், ராஜுவுக்கு கண்டன கருத்துக்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.இந்நிலையில் நடிகை திரிஷா சார்பில் ஏ.வி. ராஜுக்கு வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறி இருப்பதாவது:-என்னைப்பற்றி நீங்கள் கூறிய அவதூறு கருத்துக்கள் எனக்கு மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.நீங்கள் என் மீது கூறப்பட்ட கருத்துக்களுக்கு 24 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். அதை தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்களில் விளம்பரம் மூலமாகவும், டி.வி., யூடியூப் மற்றும் சமூக ஊடகங்கள், சமூக வலைதளங்களின் மூலம் மன்னிப்பு கேட்க வேண்டும்.தவறினால் உங்கள் மீது கிரிமினல் மற்றும் சிவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.