மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘லூசிபர்’. மலையாளத்தில் 200 கோடி ரூபாய் வசூல் செய்த முதல் படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதில் மோகன்லால் கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.
இப்படத்தை பிரபல இயக்குனர் மோகன் ராஜா இயக்க உள்ளார். இதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. ரீமேக் படமாக இருந்தாலும் அதில் சில மாற்றங்களை செய்துள்ளார் இயக்குனர், குறிப்பாக சிரஞ்சீவிக்கு இப்படத்தில் காதல் காட்சிகள் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி இப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க நடிகை திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திரிஷாவும், சிரஞ்சீவியும் கடைசியாக கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ஸ்டாலின் என்கிற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர். அதேபோல் மோகன் ராஜா இயக்கத்தில் நடிகை திரிஷா ஏற்கனவே உனக்கும் எனக்கும் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.