கன்னியாகுமரியில் சின்ன சின்ன வேலைகளை செய்து கொண்டு தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் அருண் விஜய். இவருக்கு காது கேட்காது மற்றும் பேச முடியாது. அருண் விஜய்க்கு நிரந்தரமான வேலை இல்லாததால் அடிதடியில் ஈடுபடுகிறார். இதனால் அருண் விஜய்யை ஊரில் இருப்பவர்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் வேலைக்கு சேர்த்து விடுகிறார்கள்.அங்கு, பார்வையற்ற இளம் பெண்கள் குளிப்பதை மூன்று பேர் பார்க்கிறார்கள்.
இதில் இருவரை அருண் விஜய் கொடூரமாக கொலை செய்கிறார். மேலும் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டு ஜெயிலுக்கு செல்கிறார். எதற்காக கொலை செய்தேன் என்பதை போலீசிடம் அருண் விஜய் சொல்ல மறுக்கிறார்.இறுதியில் அருண் விஜய், கொலை செய்த காரணத்தை சொன்னாரா? மூன்று பேரில் மீதம் இருக்கும் ஒருவரை கொன்றாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்து இருக்கும் அருண் விஜய், மாற்றுத்திறனாளியாக நடித்து அசர வைத்து இருக்கிறார். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் கவனிக்க வைத்து இருக்கிறார். விசாரணையின் போது பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார். தங்கை பாசத்தில் நெகிழ வைத்து இருக்கிறார். உடல் மொழி, முகபாவனை என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். திரையில் பேசாமல் நடித்து, அனைவரையும் பேச வைத்து இருக்கிறார்.துறுதுறு பெண்ணாக நடித்து இருக்கிறார் நடிகை ரோஷ்ணி பிரகாஷ். குறிப்பாக பல கெட்டப்பு மற்றும் பல மொழிகளில் பேசி நடித்து இருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அருண் விஜய், ரோஷ்ணிக்கு இடையேயான செல்ல சண்டை ரசிக்கும் படி உள்ளது. தங்கையாக நடித்து இருக்கும் ரிதா, அண்ணன் அருண் விஜய்யை நினைத்து வருந்துவது, அவரிடம் உண்மையை கேட்க முயற்சி செய்வது என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக செய்கையில் விஜய்யிடம் பேசும் காட்சியில் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். மிடுக்கான போலீஸ் அதிகாரி தோற்றத்தில் சமுத்திரகனி கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். நீதிபதியாக நடித்து இருக்கும் மிஷ்கின் அவரது கதாப்பாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
தனக்கே உரிய பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் பாலா. பெண்கள் பாதுகாப்பு, ஆதரவற்ற மற்றும் மாற்று திறனாளி பெண்களுக்கு நடந்த கொடுமையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார். இதில் அண்ணன், தங்கை பாசத்தை அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சியில் பதரவைத்து இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். பெண்களை தவறாக பார்ப்பவர்களுக்கு சரியான தண்டனை கொடுத்து இருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சாம்.சி.எஸ். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார்.
குருதேவ்வின் ஒளிப்பதிவு சிறப்பு.
தயாரிப்பு V House Productions நிறுவனம், இப்படத்தை தயாரித்துள்ளது.”,