Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

வரலாறு முக்கியம் திரைவிமர்சனம்

varalaru mukkiyam movie review

கோயமுத்தூரில் யூ டியூப் சேனல் நடத்தி வரும் ஜீவா, அவருடன் அப்பா, கே.எஸ்.ரவிக்குமார் சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் வசித்து வருகிறார்கள். அதே தெருவிற்குக் கேரளாவில் இருந்து வந்த காஷ்மீரா, பிரக்யா ஆகியோர் குடியேறுகிறார்கள்.

ஜீவாவுக்கும் காஷ்மீராவுக்கும் காதல் வருகிறது. ஆனால் காஷ்மீரா அப்பாவுக்குத் துபாய் மாப்பிள்ளை ஒருவருக்குத்தான் தன் பெண்ணை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆசை படுகிறார். இவர்களின் காதல் இரு வீட்டாரின் பெற்றோருக்கும் தெரிய வருகிறது. இருவரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இறுதியில் ஜீவா, காஷ்மீரா இருவரும் காதலில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஜீவா இளமை துள்ளலுடன் நடித்திருக்கிறார். எஸ் எம் எஸ் படத்தில் பார்த்த அதே ஜீவாவை இப்படத்தில் பார்க்க முடிகிறது. இவரின் இயல்பான டைமிங் காமெடி நன்றாக கைகொடுத்திருக்கிறது. அப்பா, அம்மாவிடமே கலாய்க்கும் காட்சியும் காஷ்மீரா பிரக்யா இருவரிடமும் மாட்டிக்கொண்டு திணறும் போதும் ரசிக்க வைத்திருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சி வரை ஜீவா முழு வேகத்துடன் களம் இறங்கி ஆடியிருக்கிறார்.

ஜீவாவுக்கு தோள் கொடுத்துக் கலக்கி இருக்கிறார் வி.டி.வி. கணேஷ். இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு நகைச்சுவையில் கொடி நாட்டியிருக்கிறார். கண்ணாடியில் கோடு போடும் அந்த நகைச்சுவை இன்னும் பல நாட்களுக்குப் பேசப்படும்.

கே.எஸ்.ரவிக்குமாரின் பழைய காதலி சந்திப்பு சரவெடி சிரிப்பு. பெண்களுக்கு ஆட்டோகிராப் இருக்கக்கூடாதா என்ற சரண்யாவின் கேள்வி பல இல்லத்தரசிகளின் குரலாக ஒலிக்கிறது. கல்யாண மண்டப நகைச்சுவை காட்சி கைதட்டல். காஷ்மீரா, பிரக்யா ஆகியோர் நன்றாக நடித்திருக்கிறார்கள்.

சந்தோஷ் ராஜன் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் விறுவிறுப்பு சேர்த்திருக்கலாம். இன்றைய சூழலுக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து வர நல்ல பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது.

ஷான் ரஹ்மான் இசை நகைச்சுவை படத்திற்கு ஏற்ற இசை. சக்தி சரவணன் ஒளிப்பதிவு படத்தின் முக்கிய அங்கமாக இருக்கிறது.

மொத்தத்தில் வரலாறு முக்கியம் காமெடி கலாட்டா.

varalaru mukkiyam movie review
varalaru mukkiyam movie review