Tamilstar
Movie Reviews

வெல்வெட் நகரம் திரைவிமர்சனம்

velvet nagaram movie

நடிகையாக இருக்கும் கஸ்தூரி, மலை வாழ் மக்களின் நிலைமையை அறிந்து அவர்களுக்கு நல்லது செய்ய நினைக்கிறார். கார்ப்பரேட் நிறுவனங்கள் மலையில் கம்பெனி தொடங்குவதற்காக அங்கு தீ வைத்து அங்கு வாழும் மக்களை விரட்ட முயற்சிக்கிறார்கள். இந்த தீ இயற்கையாக வந்தது இல்லை, செயற்கையாக ஏற்படுத்தப்பட்டவை என்பதை அறிந்த கஸ்தூரி, அதற்கான ஆவணங்களை தயார் செய்து ரிப்போர்ட்டராக இருக்கும் வரலட்சுமியிடம் கொடுக்க நினைக்கிறார்.

இந்நிலையில், மர்ம நபரால் கஸ்தூரி கொலை செய்யப்படுகிறார். இதையறிந்த வரலட்சுமி, கஸ்தூரி சொன்ன ஆவணங்களை கைப்பற்றி மலை வாழ் மக்களுக்கு தீர்வு காணவும், கஸ்தூரியை கொலை செய்தது யார் என்பதையும் கண்டறிய முயற்சி செய்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக பணம் பறிக்கும் கும்பலிடம் வரலட்சுமி சிக்குகிறார்.

இறுதியில் பணம் பறிக்கும் கும்பலிடம் இருந்து வரலட்சுமி தப்பித்தாரா? ஆவணங்களை கைப்பற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் ரிப்போர்ட்டராக நடித்திருக்கும் வரலட்சுமி, தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக இல்லாமல் மற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து நடித்திருக்கிறார். ஆர்ப்பாட்டம் இல்லாமல் வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் அர்ஜாய்.

காமெடி நடிகராக வலம் வந்த ரமேஷ் திலக் இப்படத்தில் நல்லவரா, கெட்டவரா என்று சிந்திக்க வைத்திருக்கிறார். பாடகியான மாளவிகா சுந்தர், இந்த படத்தில் நடிப்பால் கவனிக்க வைத்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.

வித்தியாசமான கதையை கையில் எடுத்த இயக்குனர் மனோஜ் குமார் நடராஜன், முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்களை உட்கார வைத்திருக்கிறார். மெதுவாக தொடங்கும் திரைக்கதை எங்கு செல்கிறது என்று தெரியாமல் இறுதியில் ஒரு இடத்தில் கச்சிதமாக நிற்கிறது.

பகத் குமாரின் ஒளிப்பதிவும், சரண் ராகவனின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் துணையாக அமைந்திருக்கிறது.

மொத்தத்தில் ‘வெல்வெட் நகரம்’ சுமாரான நகரம்.