தனுஷ்-வெற்றிமாறன் கூட்டணி, தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் கூட்டணியாக விளங்கி வருகிறது. இவர்கள் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் என அனைத்துமே மாஸ்டர் பீஸ் தான்.
கடந்த 2018-ம் ஆண்டு இவர்கள் கூட்டணியில் வெளியாகி வெற்றிபெற்ற படம் வடசென்னை. இப்படத்தின் 2-ம் பாகம் உருவாகும் எனவும் அப்போது அறிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு வெளியாகி மூன்று வருடங்கள் ஆகியும், அப்படம் குறித்த அடுத்தக்கட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதனால் வடசென்னை 2 உருவாகிறதா, இல்லையா என்கிற குழப்ப நிலை நீடித்து வந்தது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு விழாவில் கலந்துகொண்டு பேசிய வெற்றிமாறன், வடசென்னை 2-ம் பாகம் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து உருவாக வாய்ப்புள்ளதாக கூறினார். மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது சூரியை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதையடுத்து சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தை இயக்க உள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடித்த பிறகே தனுஷின் வடசென்னை-2 படத்தை இயக்குவார் என தெரிகிறது.