ஊட்டியில் வாழ்ந்து வரும் நாயகன் அசோக் செல்வன், அதே ஊரில் இருக்கும் ஐஸ்வர்யா மேனனை காதலித்து வருகிறார். அதே சமயம் மர்மமான முறையில் சிலர் இறக்கிறார்கள். ஒருநாள் அசோக் செல்வனும், ஐஸ்வர்யாவும் பைக்கில் செல்லும் போது, மர்ம நபர்களால் ஐஸ்வர்யா கொல்லப்படுகிறார்.
காயங்களுடன் உயிர் தப்பிக்கும் அசோக் செல்வன், காதலி ஐஸ்வர்யா மேனனை கொலை செய்த மர்ம நபர்களை தேடி அலைகிறார். இறுதியில் அசோக் செல்வன் மர்ம நபர்களை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் அசோக் செல்வன், கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார். எப்போதும் கலகலவென இருக்கும் அசோக் செல்வன், இப்படத்தில் சீரியசான முகத்துடன் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். முதல் நாயகியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா மேனன் இப்படத்தில் தன் திறமையை நிரூபிக்க முயற்சி செய்து இருக்கிறார். ஜனனி கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்.
திரில்லர் கதையை மையமாக கொண்டு படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சந்தீப் ஷாம். மெதுவாக நகரும் திரைக்கதை படத்திற்கு பலவீனம். இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்கள் படத்திற்கு பலம். அடுத்தடுத்து வரும் காட்சிகள் யூகிக்க முடியாத அளவிற்கு படத்தை கொடுத்து இருக்கிறார். திரைக்கதையில் சுவாரஸ்யம் இருந்திருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம்.
ஜானு சந்தர் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தி இருக்கலாம். சக்தி அரவிந்தின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் ‘வேழம்’ வேகமில்லை

vezham movie review