2012-ம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அதன்பின்னர் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான நானும் ரவுடி தான் படத்தை இயக்கி தனக்கான ரசிகர்களை பிடித்தார். இதனை தொடர்ந்து தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக உயர்ந்தார்.இதைத்தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள புதிய படத்தில் லவ் டுடே படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த இயக்குனர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிக்கவுள்ளதாக சில காலமாக செய்தி பரவி வந்தது.
இந்நிலையில், இந்த செய்தி தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இந்த படத்தில் பிரதீப் கதாநாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.