ஆரம்பத்தில் துணை நடிகராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய விஜய்சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படத்தில் கதாநாயகனாகி, முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார். பீட்சா, சூதுகவ்வும், நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சேதுபதி, நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, 96 என்று பல படங்கள் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தன.
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்வதும், இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை, முதியவர் தோற்றங்களில் நடிப்பதுமே அவரை பெரிய நடிகராக்கி உள்ளது. பிறமொழி படங்களிலும் வாய்ப்புகள் குவிகின்றன. தற்போது 10-க்கும் மேற்பட்ட படங்கள் கைவசம் வைத்துள்ளார்.
இதுவரை 10 முதல் 15 கோடி வரை சம்பளம் வாங்கிய விஜய்சேதுபதிக்கு இந்தி வெப் தொடர் ஒன்றில் நடிக்க ரூ.55 கோடி சம்பளம் பேசி இருப்பதாக இணையதளத்தில் தகவல் பரவி வருகிறது. இந்த தொடரில் நாயகனாக நடிக்கும் இந்தி நடிகர் ஷாகித் கபூர் சம்பளம் ரூ.40 கோடி என்று கூறப்படுகிறது.
அவரை விட விஜய்சேதுபதிக்கு அதிக சம்பளம் கொடுப்பது திரையுலகினர் மத்தியில் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த தொடரில் ராஷிகன்னா நாயகியாக நடிக்கிறார்.