Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

விஜயானந்த் திரைவிமர்சனம்

vijayanand movie review

கர்நாடகாவில் மிகப்பெரும் தொழிலதிபரான விஜய் சங்கேஸ்வரரின் வாழ்க்கை வரலாறை தழுவி விஜயானந்த் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் லாஜிஸ்டிக் நிறுவனமான வி ஆர் எல் நிறுவனம் எப்படி உருவானது என்பதை இப்படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார்கள். பிரிண்டிங்க் பிரஸ் நடத்தி வந்த பி.ஜி. சங்கேஸ்வருக்கு மூன்று மகன்கள். அதில் ஒருவர் விஜய் சங்கேஸ்வர். தனது 3 மகன்களுக்கும் அதே தொழிலைக் கற்றுக் கொடுத்தார் பி.ஜி. சங்கேஸ்வர். தொழிலை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் சென்ற மகன் விஜய் சங்கேஸ்வர், இந்த தொழிலை மட்டும் செய்து வந்தால் பெரிதாக சாதிக்க முடியாது என்று லாரி சர்வீஸ் தொழில் செய்ய முன்வந்தார்.

இதற்கு அவரது தந்தை மறுப்பு தெரிவித்தார். இருப்பினும் தந்தை சொல்லை மீறி, கடன் வாங்கி, ஒரு லாரியை வாங்கி தொழிலை தொடங்கினார் விஜய் சங்கேஸ்வர். அதன்பின் அவர் எதிர்பார்த்த அளவிற்கு எதுவும் லாபமில்லாமல், தொடர்ந்து தோல்வியை சந்தித்தார். இருந்தாலும், நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு 4 லாரிகளை வாங்கினார். ஒரு கட்டத்தில் தொழில் வளர்ச்சியடைய, இன்னல்களும் வர ஆரம்பித்தது. இறுதியில் இன்னல்களை சமாளித்து எப்படி தொழிலதிபர் ஆனார்? என்பதே படத்தின் மீதிக்கதை. விஜய் சங்கேஸ்வரராக நிஹால் நடித்து இருக்கிறார். கதாபாத்திரத்திற்கு தேவையான சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். தோல்வி அடையும் போதும், வெற்றி கிடைக்கும் போதும் முகபாவனையில் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.

இவரின் மனைவியாக நடித்திருக்கும் சிரி பிரகலாத் அழகாக வந்து அளவான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவர்களின் மகனாக வரும் பாரத் போபனா, நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஆனந்த் நாக் அனுபவ நடிப்பை கொடுத்து இருக்கிறார். பயோபிக் கதையை எடுத்துக் கொண்ட இயக்குனர் ரிஷிகா சர்மா, திரைக்கதையில் எந்த சமரசமும் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக இயக்கி இருக்கிறார். பல காட்சிகளை அழகாக வடிவமைத்து இருக்கிறார். கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் சூப்பர் என்றே சொல்லலாம். பின்னணி இசையில் கவனிக்க வைத்து இருக்கிறார். கீர்த்தன் பூஜாரியின் ஒளிப்பதிவு, ஒவ்வொரு காலக்கட்டத்திற்கு ஏற்ப பயணித்து இருப்பது சிறப்பு. மொத்தத்தில் விஜயானந்த் ரசிக்கலாம்.

vijayanand movie review

vijayanand movie review