தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால், விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கை அழகிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்த போட்டி நடைபெற்றது.
விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கவனித்துக்கொண்டிருந்த நடிகர் விஷால் திடீரென மயங்கி விழுந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
சில வருடங்களுக்கு முன்பு விஷால் நடித்த ‘மதகஜராஜா’ திரைப்படம் நீண்ட கால தாமதத்திற்கு பிறகு இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெளியீட்டு விழாவில் விஷாலின் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது அவரது முகத்தில் ஒருவித பதற்றமும், கைகள் நடுக்கத்துடனும் காணப்பட்டார். பின்னர் அவர் நலமாக இருப்பதாக அவரே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மீண்டும் பொது நிகழ்ச்சியில் விஷால் மயங்கி விழுந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மயக்கம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஷால் விரைவில் பூரண குணமடைந்து திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மேலும் தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.