நிலம் வாங்கி தருவதாக கூறி விஷ்ணு விஷாலின் தந்தை ரமேஷ் குடவாலா தன்னை ஏமாற்றியதாக நடிகர் சூரி சமீபத்தில் பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அதை திட்டவட்டமாக மறுத்த விஷ்ணு விஷால், தன் தந்தை குற்றமற்றவர் என சமூக வலைதளங்களில் கூறி வந்தார். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், காடன் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகர் விஷ்ணு விஷாலிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ‘இந்த வழக்கின் விசாரணை நடந்து வருவதால் என்னால் இதுபற்றி அதிகம் பேசமுடியாது. ஆனால் நிலம் சம்பந்தப்பட்ட புகாரில் எனக்கும், என் தந்தைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும். அவர் அளித்த புகாரின் ஒவ்வொரு வரிக்கும் என்னால் விளக்கம் அளிக்கமுடியும்.
அப்படி செய்தால், சூரியின் இருண்ட பக்கங்களை விளக்க வேண்டி இருக்கும். அவ்வாறு செய்தால், எனக்கும் அவருக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். சில வருடங்களுக்கு முன்னர் என் தந்தையின் காலில் விழுந்து வணங்கி, நீங்கள் தான் என்னுடைய கடவுள் என்று சொன்ன ஒருவர், தற்போது எங்கள் மீது புகார் அளித்திருக்கிறார். சூரி மூலம் தான் சம்பாதித்து சாப்பிடவேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை’ எனக் கூறினார்.