மறைந்த நடிகர் விவேக், கடந்த 1987-ம் ஆண்டில் வெளிவந்த ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து அவர் எல்லா கதாநாயகர்களின் படங்களிலும் நடித்தார். நகைச்சுவையுடன் சமூக சீர்திருத்த கருத்துகளை பேசி, பல படங்களில் நடித்து இருந்தார்.
தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு, பசுமை புரட்சிக்கு உதவினார். நகைச்சுவை படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்ததால், கதாநாயகனாக மாறினார். ‘பாலக்காட்டு மாதவன்’ என்ற படத்தில் கதாநாயகனாக சோனியா அகர்வால் ஜோடியாக நடித்தார்.
கடைசியாக அவர், படங்களை இயக்க ஆயத்தமாகி வந்ததாகவும், இதற்காக அவர் ஒரு நல்ல கதையை தயார் செய்ததாகவும் தயாரிப்பாளர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: விவேக் என்னை நேரில் சந்தித்து, படம் இயக்கும் ஆசையை வெளிப்படுத்தினார். அதுவும் உங்கள் சத்யஜோதி பிலிம்ஸ் பட நிறுவனத்தின் மூலம், நான் இயக்குனராக அறிமுகமாக வேண்டும் என்று கூறினார். கதை சொல்லுங்கள் என கேட்டேன். 2 மணி நேரம் கதை சொன்னார்.
கதையை கேட்டு அசந்து போனேன். சூப்பர் கதை என்று விவேக்கை பாராட்டினேன். உங்களை இயக்குனராக அறிமுகம் செய்வதில் பெருமைப்படுகிறேன் என்று சொன்னேன். கொரோனா காலம் முடிந்ததும் படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என்று விவேக்கிடம் வாக்குறுதி கொடுத்தேன். அதற்குள் விவேக் இறந்து விட்டாரே என்று கண்கலங்கினார், தியாகராஜன்.
Rest in peace Vivek sir. pic.twitter.com/87SWdTMS6G
— TG Thyagarajan (@TGThyagarajan) April 17, 2021