கும்பகோணத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார் நாயகன் சிபிராஜ். இவரும் நாயகி ஷிரின் காஞ்வாலாவும் காதலித்து வருகின்றனர். இதே ஊரில் அரசியல்வாதியாக இருக்கும் சமுத்திரகனியை சிபிராஜ் தலைமையிலான டீம் என்கவுண்டர் செய்கிறது.
சில நாட்களில் பிறந்த குழந்தைகள் ஊரில் காணாமல் போகிறது. இதையறிந்த சிபிராஜ் தீவிர தேடுதல் வேட்டையில் களமிறங்குகிறார். கண்டுபிடிக்கப்பட்ட குழந்தை ஒன்று வீட்டிற்கு சென்றவுடன் இறக்கிறது. மீண்டும் இதே போல் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. இதே நேரத்தில் சமுத்திரகனி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் சிபிராஜ் மீது விபத்தை ஏற்படுத்துகிறார் நட்டி.
இந்த விபத்தில் உயிர் பிழைக்கும் சிபிராஜ், தன் மீது விபத்தை ஏற்படுத்திய நட்டி யார் என்பதை விசாரிக்க ஆரம்பிக்கிறார். இறுதியில் நட்டி யார் என்பதை சிபிராஜ் கண்டுபிடித்தாரா? குழந்தைகளை கடத்தியது யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சிபிராஜ், மிடுக்கான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார். நாயகியாக வரும் ஷிரின் காஞ்வாலா அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
நட்டி வில்லனாக மிரட்டி இருக்கிறார். கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். இவர் கதாபாத்திரத்தின் டுவிஸ்ட் ரசிக்க வைக்கிறது. சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் சமுத்திரகனி. ரித்விகா, சனம் ஷெட்டி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள்.
மெடிக்கல் கிரைம் கதையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அன்பரசன். இதுபோன்ற கதைகள் பல வந்திருந்தாலும் இப்படம் முற்றிலும் மாறுப்பட்டு வித்தியாசமான திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. மெடிக்கல் கிரைம் பற்றி மிகவும் ஆழமாக சொன்ன விதமும், திருப்பங்கள் கொடுத்த விதமும் அருமை.
தர்ம பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணியில் ஸ்கோர் செய்திருக்கிறார். ராசாமணியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.
மொத்தத்தில் ‘வால்டர்’ கர்ஜனை.