‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர், விஷ்ணு விஷால். ‘பலே பாண்டியா,’ ‘ராட்சசன்,’ ‘முண்டாசுப்பட்டி’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ரமேஷ்குடவாலாவின் மகன். சில வருடங்களுக்கு முன்பு நடிகர் கே.நட்ராஜின் மகளை திருமணம் செய்து, பின்னர் விவாகரத்து செய்தார்.
அதைத்தொடர்ந்து சில நடிகைகளுடன் இவரை இணைத்து கிசுகிசுக்கள் வெளிவந்தன. இதனிடையே, பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவை காதலிப்பதாக விஷ்ணு விஷால் தெரிவித்தார். கடந்தாண்டு இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில், திருமணம் குறித்து நடிகர் விஷ்ணு விஷால் கூறியதாவது: ‘‘வாழ்க்கை எப்போதும் ஒரேமாதிரி இருக்கும் என்று எதிர்பார்க்கக் கூடாது. ஏற்றத் தாழ்வு இருக்க தான் செய்யும். ‘பாசிட்டிவ்’ ஆகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது. சோதனைகளை தாண்டி போகவேண்டும்.’’ என்று அப்பா சொல்வார்.
அதுதான் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது. எனக்கும், ஜுவாலா கட்டாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. எங்கள் திருமணம் விரைவில் நடைபெறும்.’’ இவ்வாறு விஷ்ணு விஷால் கூறினார்.