கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘சுல்தான்’. இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகர் கார்த்தியும், நடிகை ராஷ்மிகாவும் நேற்று சமூக வலைதளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினர். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.
அதேபோல் நடிகை ராஷ்மிகா, கார்த்தியிடம் பொன்னியின் செல்வன் படம் பற்றி கேள்வி எழுப்பினார். இதற்கு கார்த்தி பதில் கூறியதாவது: “எனது அடுத்த படம் ‘பொன்னியின் செல்வன்’. இரு பாகங்களாக வெளிவரவுள்ளது. 5 பாகங்கள் கொண்ட புத்தகத்தை, இரண்டு பாகங்கள் கொண்ட படமாக உருவாக்கி வருகிறோம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. வரலாற்று சம்பவங்களின் அடிப்படையில் எழுதப்பட்ட கற்பனைக் கதை. விக்ரம், ஜெயம் ரவி, ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா ராய் என மிகப் பெரிய நடிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதுவரை 70 சதவீதப் படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.
கொரோனா பிரச்சனையால் படம் தாமதமாகிக் கொண்டிருக்கிறது. 2022-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிட்டு உள்ளோம். இந்தக் கதையை தமிழ்த் திரையுலகம் கடந்த 60 ஆண்டுகளாகப் படமாக்க முயன்று வருகிறது. ஆனால் அது இப்போதுதான் நடைபெறுகிறது”. இவ்வாறு கார்த்தி கூறினார்.