மலையாள நடிகரும், சினிமா தயாரிப்பாளருமான விஜய்பாபு, மீது கேரள நடிகை ஒருவர் பாலியல் புகார் கூறினார். இது தொடர்பாக கொச்சி போலீசில் அவர் அளித்த புகாரில், நடிகர் விஜய்பாபு, தன்னை வீட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்திருந்ததாக கூறியிருந்தார். நடிகையின் புகார் தொடர்பாக கொச்சி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதை அறிந்த நடிகர் விஜய்பாபு, நடிகையின் பெயர் விபரங்களுடன் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டார். இது சட்டவிரோதம் எனக்கூறிய போலீசார், இதற்காகவும் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
இந்த 2 வழக்குகள் தொடர்பாக போலீசார் விஜய்பாபுவை விசாரணைக்கு அழைத்தனர். இதையடுத்து அவர் தலைமறைவானார். அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதை அறிந்த போலீசார் அவரை பிடிக்க இன்டர்போல் போலீசாரின் உதவியை நாடினர். இதற்கிடையே நடிகர் விஜய்பாபு, முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு செய்தார். மனுவை விசாரித்த கோர்ட்டு, அவரை விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராக உத்தரவிட்டது. மேலும் 2-ஆம் தேதி வரை அவரை கைது செய்யவும் தடை விதித்தது.
கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து விஜய்பாபு நேற்று வெளிநாட்டில் இருந்து கொச்சி வந்தார். பின்னர் அவர் போலீஸ் அதிகாரிகள் முன்பு ஆஜர் ஆனார். அப்போது அவர் நடிகை குறித்து பல்வேறு பரபரப்பு தகவல்களை தெரிவித்தார். அதன்விபரம் வருமாறு:-
என் மீது புகார் கூறிய நடிகையை எனக்கு முன்பே தெரியும். அவர் என் வீட்டுக்கு அடிக்கடி வருவார். அவரது சம்மதத்துடன் தான் இருவரும் உறவு கொண்டோம். எனது படங்களில் நடிக்க நடிகைக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் என்மீது புகார் கூறியுள்ளார். இது வேண்டுமென்றே கூறப்பட்ட புகார். எனது தொழில் எதிரிகளால் புனையப்பட்ட வழக்கு. இது தொடர்பான விசாரணைக்கு நான் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என போலீசாரிடம் அவர் கூறியுள்ளதாக தெரிகிறது.
போலீஸ் விசாரணையின் போது நடிகையுடன் வாட்ஸ் அப்பில் பகிர்ந்து கொண்ட தகவல்களையும் ஒப்படைத்துள்ளார்.
அந்த தகவல்களை போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள். இதற்கிடையே இன்றும் நடிகர் விஜய்பாபுவை விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர். அதன்படி நடிகர் விஜய்பாபு கொச்சி போலீசார் முன்பு இன்றும் ஆஜரானார். அப்போது நடிகையின் விபரங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்தது ஏன்? என்பது பற்றியும் விசாரணை நடக்க உள்ளது. இது தவிர அவர் தலைமறைவாக இருக்க உதவியது யார்? எங்கு தலைமறைாவாக இருந்தார் என்பது பற்றியும் போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.