காட்டில் சிக்கிக் கொள்ளும் ஐந்து பேர் எதிர்க்கொள்ளும் பிரச்சனைகள் குறித்த கதை.
ஆதர்ஷ், காதம்பரி, பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி ஆகிய ஐந்து பேரும் ரிசர்ச் செய்து யூடியூபில் பதிவிட்டு வருகின்றனர். அவர்களிடம் தான் ஒரு பழைய பங்களா வீடு வாங்கியுள்ளதாகவும் அதில் பேய் இருப்பதாகவும் கூறுவதால் இதனை நீங்கள் பதிவிட வேண்டும் என்று ஒருவர் அணுகுகிறார்.
இதற்காக இந்த ஐந்து பேரும் அந்த காட்டிற்குள் செல்கின்றனர். அங்கு, எதோ ஒரு அமானுஷ்ய விஷயம் தங்களை பின் தொடர்வது போன்று அவர்களுக்கு தோன்றுகிறது. தொடர்ந்து அந்த அமானுஷ்ய உருவம், ஒவ்வொருவரையும் கொலை செய்கிறது. இறுதியில் அந்த அமானுஷ்யத்திடம் இருந்து தப்பித்தார்களா? யார் இவர்களை திட்டம்போட்டு இந்த காட்டிற்குள் அழைத்து வந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
ஆதர்ஷ், காதம்பரி, பஃபின், நிவாஸ், அரவிந்த் சாமி, ரவிச்சந்திரன் என படத்தில் நடித்தவர்களில் பலரும் புதுமுகங்கள் என்பதால் படத்தின் கதாப்பாத்திரங்களை புரிந்து கொள்வது சற்று கடினமாக உள்ளது. ஆனால் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை சரியாக செய்ய முயற்சி செய்துள்ளனர்.
முன்னொரு காலத்தில் வாழ்ந்த நாயாடி என்ற மலைவாழ் மக்களை பற்றிய கதையை இயக்குனர் எடுக்க நினைத்திருக்கிறார் இயக்குனர் ஆதேஷ். ஆனால் கதைக்கு தேவையான விஷயங்களை தாண்டி மற்ற விஷயங்களை காண்பித்து போர் அடிக்க வைத்துள்ளார். திரைக்கதை விறுவிறுப்பாக இல்லாததால் கவன சிதறல் ஏற்படுகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். முழுக்க முழுக்க காடு, ஓட்டம், கொலை என இதை மட்டுமே வைத்து கதை நகர்வதால் கவனம் சிதறுகிறது.
அருணின் பின்னணி இசை படத்திற்கு உதவ வில்லை. மோசஸ் டேனியலின் ஒளிப்பதிவு ஓகே மொத்தத்தில் நாயாடி – மக்களை நாடவில்லை