Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இலங்கை யாழ் மண்ணில் சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம் குமார்!

Ram Kumar Sivaji Ganesan’s eldest son in Sri Lanka’s Jaffna soil

சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம் குமார் இலங்கையில் தந்தை ‘நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் நிதி சேகரித்துத் தந்ததால் உருவான மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையைப் பார்க்க நேற்று ஏப்ரல் 24ந் திகதி சென்றிருந்தார்.

இன்றைக்கு 70 ஆண்டுகளுக்கு முன்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக சிவாஜி கணேசன் 1953ம் ஆண்டு ஒக்டோபர் 28ந் தேதி யாழ்ப்பாணம் நகரசபை மண்டபத்தில் “என் தங்கை” என்ற நாடகத்தை நடத்தி நிதிசேகரித்துக் கொடுத்திருந்தார்!

அதே நாடகம் கொழும்பிலும் நடத்தப்பட்டது. அந்த நேரத்தில் சிவாஜி ஒரு இளம் நடிகர். சிவாஜியின் முதல் படமான ‘பராசக்தி ‘ 1952 ஒக்டோபரில் வெளியானது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து முனைவர் மருதுமோகன் எழுதிய புத்தகத்தின் யாழ்ப்பாண வெளியீட்டுக்காக இங்கிலாந்தில் வசிக்கும் ஈழத்தமிழரான முனைவர் சிவா பிள்ளையின் அழைப்பின்பேரில் ‘சென்னை-யாழ்ப்பாணம்’ பயணிகள் விமானத்தில் பலாலிக்குப் பறந்து சென்ற ராம் குமார், யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டார்.

சென்னை திரும்பமுன்னர் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கும் அவர் சென்றார். வைத்தியசாலையின் நிர்வாகிகள், வைத்தியர்கள், தாதிமார் இணைந்து அவரை, வரவேற்றிருக்கிறார்கள். அந்த அன்பான உபசரிப்புக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போயிருக்கிறார் ‘சிவாஜியின் செல்வன்’.

யாழ்ப்பாணத்தின் ஒரு சில பகுதிகளையும் சுற்றிப் பார்த்திருக்கிறார் ராம் குமார். நல்லூர் கந்தசாமி கோவில், தொல்புரம் மன்னதோட்டம் ஜெகஜோதி அம்பாள் ஆலயம், பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயம், கீரிமலை, செல்வச்சந்நதி, மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் திருவிழா என ஒருபுறமும்,

யாழ் கோட்டை, இந்தியா அன்பளித்த கலாச்சார மண்டபம், யாழ் நூல்நிலையம், பருத்தித்துறை முனை, சங்கிலியன்தோப்பு, மந்திரிமனை என பட்டியல் நீள்கிறது. தேசமும் தெய்வீகமும் அவரைக் கவர்ந்துவிட்டிருக்கிறது.

தனது தந்தையின் கையால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் நட்டு வைக்கப்பட்டிருந்த மாமரத்தை கண்டபோது கடுமையாக உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார் ராம்குமார்!!

‘தேவர் மகன்’ அல்லவா.

தகவல்: Narayana Moorthy