அகில இந்திய விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவியருக்கு சான்றிதழ், ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் தனித்தனியாக சால்வை அணிவித்து சான்றிதழ்களை வழங்கினார்.
மேலும், மாணவ-மாணவிகள் அம்பேத்கர், பெரியார், காமராஜர் போன்ற தலைவர்கள் குறித்து படிக்க வேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியானது விஜய் அரசியல் வருகையின் முன்னோட்டம் என்று பலர் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஜய் மற்றும் நடிகர்கள் அரசியலுக்கு வருவது குறித்து விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்து அவர் கூறியதாவது:- பொது வாழ்க்கைக்கு வரக் கூடியவர்கள் எந்த பருவத்தில் வேண்டுமானாலும் வரலாம். பொதுவாக சினிமாவில் இருக்கும் அனைவரும் சினிமா புகழ் இருந்தால் போதும் முதலமைச்சர் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தோடு அரசியலுக்கு வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் தான் இந்த சாபக்கேடு இருக்கிறது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் திரையுலகினர் அவர்களுடைய வேலையை மட்டுமே செய்கின்றனர்.
தமிழ்நாட்டில் மட்டும் தான் சினிமாவில் இருப்பவர்கள் எல்லா வேலையும் முடிந்து மார்கெட் போனதும் அரசியலுக்கு வரலாம் என்று நினைக்கிறார்கள். அரசியலுக்கு வந்து எளிய முறையில் மக்களை கவர்ந்து விடலாம் என்று நினைக்கிறார்கள். அந்த மாதிரியான எண்ணத்தோடு இல்லாமல், தொண்டு உள்ளத்தோடு விஜய் அரசியலுக்கு வந்தால் அவரை நாம் வரவேற்க கடமைப்பட்டிருக்கிறோம். மக்களுக்கும் தொண்டு செய்ய வேண்டும். ஒரு முற்போக்கு கருத்தியல் சார்ந்து களப்பணி ஆற்ற வேண்டும். இது தான் இன்று தமிழ்நாட்டில் தேவையான ஒன்றாக இருக்கிறது என்று கூறினார்.