அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நயன்தாரா, ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்த ‘அன்னபூரணி’ திரைப்படம் டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இதையடுத்து இப்படம் டிசம்பர் 29-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது.இதன்பின்னர், இப்படத்திற்கு பல எதிர்ப்புகள் வந்தது. அதுமட்டுமல்லாமல், மும்பையை சேர்ந்த சிவசேனா கட்சி முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் ‘அன்னபூரணி’ திரைப்படம் இந்து மத உணர்வை புண்படுத்துவதாகவும், லவ் ஜிகாத்தை ஆதரிப்பதாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளதாக மும்பை காவல் நிலையத்தில் இப்படத்திற்கு எதிராக புகாராளித்தார். இதையடுத்து இப்படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
அதுமட்டுமல்லாமல், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு மீண்டும் படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு அறிவித்தது. தொடர்ந்து இப்படத்தை ஓடிடியில் இருந்து நீக்குவது சரியல்ல என சிலர் கருத்து தெரிவித்தனர்.இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் \”இந்தியாவில் தணிக்கை செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என எதுவும் இல்லை. இது ஓடிடி-களுக்கும் பொருந்தும். தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை அழுத்தம் கொடுத்து ஓடிடி-யில் இருந்து நீக்கவைப்பது திரைத்துறைக்கே நல்லதல்ல. ஒரு படத்தை அனுமதிப்பதற்கும் தடை செய்வதற்கும் தணிக்கை குழுவிற்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகளே தணிக்கைக் குழுவின் அதிகாரத்தைக் கேள்விக்குட்படுத்தும்\” என்று கூறினார்.